எம்ஜிஆர் உருவத்தில் இதுதான் எனது கடைசி நாள்.. நடிகர் அரவிந்த்சாமி உருக்கம்!

Tamil

சென்னை : பெண்களின் கனவு நாயகனாக பல ஆண்டுகளாக இருந்து வரும் நடிகர் அரவிந்த்சாமி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் இப்பொழுது வில்லன் கதாபாத்திரங்களுக்காகவே செய்து வைத்தது போல தொடர்ந்து நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்ததை அடுத்து இப்பொழுது ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு கட்டங்களாக மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது முடிவுக்கு வந்த நிலையில் கடைசி நாள் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக பேசியிருக்கும் அரவிந்த்சாமியின் பதிவு இப்பொழுது வைரலாகி வருகிறது. நடிகர் அரவிந்த்சாமி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில், இவருக்கு ஆண்களைவிட பெண் ரசிகைகள் தான் ஏராளம்.

 

 

ரஜினிகாந்தின் தளபதி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வர இந்தி பட வாய்ப்புகளும் வீட்டுக் கதவைத் தட்ட ஒரேடியாக பாலிவுட்டுக்கு சென்றவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்தார்.

 

 

அதுவரை தெலுங்கு திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து ஹிட்டுகளை கொடுத்து வந்த இயக்குனர் மோகன் ராஜா, தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் இதில் ஹீரோவை விட வில்லனுக்கு மாஸான கதாபாத்திரமாக அமைந்தது. சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு நச்சுன்னு அமைந்தது, மேலும் அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது.

 

 

இதன் பிறகு மீண்டும் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அரவிந்த்சாமி மணி ரத்னம் இயக்கத்தில் உருவான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ஹீரோ கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருக்க இந்தத் திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இவ்வாறு அரவிந்த்சாமியின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமாக இருந்துவரும் நிலையில் இப்பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.

 

 

புரட்சி தலைவி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் தலைவி திரைப்படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திலும் அரவிந்த்சாமி எம்ஜிஆரின் கதாபாத்திரத்திலும் நடித்த வருகின்றனர். தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு கட்டங்களாக மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

 

 

பல நாட்களாக எம்ஜிஆர் தோற்றத்தில் நடித்து வந்த அரவிந்த்சாமி தனது கடைசி நாள் படப்பிடிப்பின்போது மேக்கப் அறையில் உட்கார்ந்து கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இதுதான் நான் எம்ஜிஆர் உருவத்தில் நடிக்கும் கடைசி நாள், இத்தனை நாட்கள் புரட்சித் தலைவரைப் போல எனக்கு ஒப்பனை செய்து கொடுத்த ரஷீத்துக்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இப்பொழுது இணைய தளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *