வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்த இயக்குனர் சுசீந்திரன் 3வது திரைப்படத்தில் காமெடி நடிகர் அப்புகுட்டியை கதா நாயகனாக ஆக்கி அதிலும் வெற்றி பெற்று தேசிய விருதையும் வென்றார். பெரும்பான்மையான கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பெரும் ஆதரவை தொடர்ந்து பெற்றுவரும் சுசீந்திரன் பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தான் இயக்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த சுசீந்திரன் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கிய ஜீவா திரைப்படத்தை இயக்கியதுடன் தயாரித்தும் இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சேரத் துடிக்கும் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் எந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது அதையெல்லாம் தாண்டி எப்படி சாதிக்கிறான் என்றக் கருவை அடிப்படையாகக் கொண்டு பல எதார்த்தமான காட்சிகளால் உருவாகி இருந்த ஜீவா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக பின் தங்கியிருந்தது. தான் இயக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுக் கொண்டே வரும் சுசீந்திரன் மீண்டும் ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இப்பொழுது சிம்புவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் தெரியாமல் முடிந்ததும் தெரியாமல் ராக்கெட் வேகத்தில் முடித்து இருக்கும் சுசீந்திரன் நேற்று சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ லான்ட்சில் செய்த செயல் இப்பொழுது ரசிகர்களிடம் பெரும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை நல்ல இயக்குனர் என பெயர் பெற்று வந்த சுசீந்திரன் நேற்று ஈஸ்வரன் ஆடியோ லான்ட்சில் நடிகை நிதி அகர்வால் பேசும்பொழுது, இடையில் வழிமறித்து “சிம்பு ஐ லவ் யூ ன்னு சொல்லுங்க” “சிம்பு மாமா ஐ லவ் யூ ன்னு சொல்லுங்க” என தொடர்ந்து நிதி அகர்வாலை பேசவிடாமல் மேடையிலேயே ஐ லவ் யூ கூறுமாறு நச்சரித்த சுசீந்திரனுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், சுசீந்திரன் அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதாவது ஈஸ்வரன் திரைப்படத்தில் நிதி அகர்வாலின் கதாபாத்திரம் சிம்புவை துரத்தி துரத்தி காதலிக்குமாறு இருக்கும் எனவும், சிம்பு அந்த காதலை ஏற்காமல் மறுத்து வரும்படியும் படத்தில் கதாபாத்திரங்கள் இருக்கும் அதைத்தான் மேடையில் செய்து காட்ட சொன்னேன் வேறு எந்த ஒரு உள்நோக்கமும் அதில் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தையும் அளித்துள்ளார். மேலும் இந்த சர்ச்சை வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரிடத்திலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.